மஹாசக்தி பஞ்சகம்


கரணமுந் தனுவும் நினக்கெனத் தந்தேன்,
      காளி நீ காத்தருள் செய்யே,
மரணமும் அஞ்சேன், நோய்களை அஞ்சேன்,
      மாரவெம் பேயினை அஞ்சேன்,
இரணமுஞ் சுகமும், பழியுநற் புகழும்
      யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்,
சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்,
      தாயெனைக் காத்தலுன் கடனே.

எண்ணிலாப் பொருளும், எல்லையில் வெளியும்,
      யாவுமாம் நின்றனைப் போற்றி
மண்ணிலார் வந்து வாழ்த்தினுஞ் செறினும்
      மயங்கிலேன், மனமெனும் பெயர்கொள்
கண்ணிலாப் பேயை எள்ளுவேன், இனியெக்
      காலுமே அமைதியி லிருப்பேன்,
தண்ணிலா முடியிற் புனைந்துநின் றிலகும்
      தாயுனைச் சரண்புகுந் தேனால்.

நீசருக் கினிதாந் தனத்தினும், மாதர்
      நினைப்பினும், நெறியிலா மாக்கள்
மாசுறு பொய்ந்நட் பதனினும், பன்னாள்
      மயங்கினே அவையினி மதியேன்,
தேசுறு நீல நிறத்தினாள், அறிவாய்ச்
      சிந்தையிற் குலவிடு திறத்தாள்,
வீசுறுங் காற்றில் நெருப்பினில் வெளியில்
      விளங்குவாள் தனைச்சரண் புகுந்தேன்.

ஐயமுந் திகைப்புந் தொலைந்தன, ஆங்கே
      அச்சமுந் தொலைந்தது, சினமும்
பொய்யுமென றினைய புன்மைக ளெல்லாம்
      போயின உறுதிநான் கண்டேன்.
வையமிங் கனைத்தும் ஆக்கியும் காத்தும்
      மாய்த்துமே மகிழ்ந்திடு தாயைத்
துய்யவெண் ணிறத்தாள் தனைக்கரி யவளைத்
      துணையெனத் தொடர்ந்து கொண்டே.

தவத்தினை எளிதாப் புரிந்தனள், போகத்
      தனிநிலை ஒளியெனப் புரிந்தாள்,
சிவத்தினை , இனிதாப் புரிந்தனள், மூடச்
      சித்தமும் தெளிவுறச் செய்தாள்,
பவத்தினை வெறுப்ப அருளினள் நானாம்
      பான்மை கொன்றவள் மயம் புரிந்தாள்,
அவத்தினைக் களைந்தாள் அறிவென விளைந்தாள்,
      அநந்தமா வாழ்க யிங்கவளே!
Previous
Next Post »
Thanks for your comment