ஜயபாரத

சிறந்து நின்ற சிந்தை யோடு
தேயம் நூறு வென்றிவள்
மறந்த விர்ந்த் நாடர் வந்து
வாழி சொன்ன போழ்தினும்
இறந்து மாண்பு தீர மிக்க
ஏழ்மை கொண்ட போழ்தினும்
அறந்த விர்க்கி லாது நிற்கும்
அன்னை வெற்றி கொள்கவே!

நூறு கோடி நூல்கள் செய்து
நூறு தேய வாணர்கள்
தேறும் உண்மை கொள்ள இங்கு
தேடி வந்த நாளினும்
மாறு கொண்டு கல்லி தேய
வண்ணி தீர்ந்த நாளினும்
ஈறு நிற்கும் உண்மை யொன்று
இறைஞ்சி நிற்பவள் வாழ்கவே!

வில்லர் வாழ்வு குன்றி ஓய
வீர வாளும் மாயவே
வெல்லுஞானம் விஞ்சி யோர்செய்
மெய்மை நூல்கள் தேயவும்
சொல்லும் இவ் வனைத்தும் வேறு
சூழ நன்மை யுந்தர
வல்ல நூல் கெடாது காப்பள்
வாழி அன்னை வாழியே!

தேவ ருண்ணும் நன்ம ருந்து
சேர்ந்த கும்பம் என்னவும்
மேவுவார் கடற்கண் உள்ள
வெள்ள நீரை ஒப்பவும்
பாவ நெஞ்சினோர் நிதம்
பறித்தல் செய்வ ராயினும்
ஓவி லாதசெல்வம் இன்னும்
ஓங்கும் அன்னை வாழ்கவே!

இதந்தரும் தொழில்கள் செய்து
இரும்பு விக்கு நல்கினள்
பதந்தரற் குரிய வாய
பன்ம தங்கள் நாட்டினள்
விதம்பெறும்பல் நாடி னர்க்கு
வேறொ ருண்மை தோற்றவே
சுதந்திரத்தி லாசை இன்று
தோற்றி னாள்மன் வாழ்கவே!
Previous
Next Post »
Thanks for your comment