நம்ம ஜாதிக் கடுக்குமோ

(புதிய கட்சித் தலைவரை நோக்கி நிதானக் கட்சியார்
சொல்லுதல்)

"ஓய் நந்தனாரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ?
நியாயந் தானோ? நீர் சொல்லும்?" என்ற வர்ணமெட்டு

பல்லவி

ஓய் திலகரே! நம்ம ஜாதிக் கடுக்குமோ?
செய்வது சரியோ? சொல்லும்

கண்ணிகள்

முன்னறி யாப் புது வழக்கம் நீர்
மூட்டி விட்ட திந்தப் பழக்கம் - இப்போது
எந்நகரிலு மிது முழக்கம் - மிக
இடும்பை செய்யும் இந்த ஒழுக்கம் (ஓய் திலகரே)

சுதந்திரம் என்கிற பேச்சு - எங்கள்
தொழும்புக ளெல்லாம் வீணாய்ப் போச்சு - இது
மதம்பிடித் ததுபோலாச்சு - எங்கள்
மனிதர்க் கெல்லாம் வந்த தேச்சு (ஓய் திலகரே)

வெள்ளை நிறத்தவர்க்கே ராஜ்யம் - அன்றி
வேறெ வர்க்குமது தியாஜ்யம் - சிறு
பிள்ளைக ளுக்கே உபதேசம் - நீர்
பேசிவைத்த தெல்லாம் மோசம் (ஓய் திலகரே)
Previous
Next Post »
Thanks for your comment