சிவசக்தி

இயற்கை யென்றுரைப்பார் - சிலர்
      இணங்கும்ஐம் பூதங்கள் என்றிசைப்பார்,
செயற்கையின் சக்தியென்பார் - உயிர்த்
      தீயென்பர் அறிவென்பர், ஈசனென்பர்,
வியப்புறு தாய்நினக்கே - இங்கு
      வேள்விசெய் திடுமெங்கள் ஓம் என்னும்
நயப்படு மதுவுண்டே? - சிவ
      நாட்டியங் காட்டிநல் லருள் புரிவாய்.

அன்புறு சோதியென்பார் - சிலர்
      ஆரிருட் காளியென் றுனைப்புகழ்வார்,
இன்பமென் றுரைத்திடுவார் - சிலர்
      எண்ணருந் துன்பமென் றுனைஇசைப்பார்,
புன்பலி கொண்டுவந்தோம் - அருள்
      பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய்
மின்படு சிவசக்தி - எங்கள்
      வீரைநின் திருவடி சரண்புகுந்தோம்.

உண்மையில் அமுதாவாய் - புண்கள்
      ஒழித்திடு வாய்களி, உதவிடுவாய்,
வண்மைகொள் உயிர்ச்சுடராய் - இங்கு
      வளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய்,
ஒண்மையும் ஊக்கமுந்தான் - என்றும்
      ஊறிடுந் திருவருட் சுனையாவாய்
அண்மையில் என்றும் நின்றே - எம்மை
      ஆதரித் தருள்செய்யும் விரதமுற்றாய்.

தெளிவுறும் அறிவினை நாம் - கொண்டு
      சேர்த்தனம், நினக்கது சோமரசம்,
ஒளியுறும் உயிர்ச்செடியில் - இதை
      ஓங்கிடு மதிவலி தனிற்பிழிந்தோம்,
களியுறக் குடித்திடுவாய் - நின்றன்
      களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம்,
குளிர்சுவைப் பாட்டிசைத்தே - சுரர்
      குலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம்.

அச்சமும் துயரும் என்றே - இரண்டு
      அசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார்,
துச்சமிங் கிவர்படைகள் - பல
      தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்,
இச்சையுற் றிவரடைந்தார் -எங்கள்
      இன்னமு தைக்கவர்ந் தேகிடவே,
பிச்சையிங் கெமக்களித்தாய் - ஒரு
      பெருநகர் உடலெனும் பெயரினதாம்.

கோடிமண் டபந்திகழும் - திறற்
      கோட்டையிங் கிதையவர் பொழுதனைந்தும்
நாடிநின் றிடர்புரிவார் - உயிர்
      நதியினைத் தடுத்தெமை நலித்திடுவார்,
சாடுபல் குண்டுகளால் - ஒளி
      சார்மதிக் கூட்டங்கள் தகர்த்திடுவார்
பாடிநின் றுனைப்புகழ்வோம் - எங்கள்
      பகைவரை அழித்தெமைக் காத்திடுவாய்.

நின்னருள் வேண்டுகின்றோம் - எங்கள்
      நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கே,
பொன்னவிர் கோயில்களும் - எங்கள்
      பொற்புடை மாதரும் மதலையரும்,
அன்னநல் லணிவயல்கள் - எங்கள்
      ஆடுகள் மாடுகள் குதிரைகளும்,
இன்னவை காத்திடவே - அன்னை
      இணைமலர்த் திருவடி துணைபுகுந்தோம்.

எம்முயி ராசைகளும் - எங்கள்
      இசைகளும் செயல்களும் துணிவுகளும்
செம்மையுற் றிடஅருள்வாய் - நின்றன்
      சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம்.
மும்மையின் உடைமைகளும் - திரு
      முன்னரிட் டஞ்சலி செய்து நிற்போம்,
அம்மைநற் சிவசக்தி - எமை
      அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய்.
Previous
Next Post »
Thanks for your comment